வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யுமென எச்சரிக்கை!!

1144

200236712-001

தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் காரணமாக நாளை முதல் இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு கரையோர மாவட்டங்களின் காலநிலை பாதிக்கப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இது பின்னர் வடமேற்கு பிராந்தியத்திற்கும் பரவும் என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் அனேகமான பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும். இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்று பலமானதாக வீசும்.

பொது மக்கள் இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதத்தைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். ஏனைய கடல் பிராந்தியங்கள் சிலவற்றிலும் இடையிடையே மழை காணப்படலாம்.

கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 – 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்து வீசும்.

புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் அம்பாந்தோடடை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதனால் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அவர் க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.