மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!

357

Mansarivu

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும், நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய மூன்று பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள பிள்ளைகளை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான செயற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்பொருட்டு விசேட உத்தியோகத்தர்கள் குழுவொன்று இடம்பெயர் முகாம்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீரியபெத்தயில் மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சீரான வானிலை நிலவுமிடத்து, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியுமென மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரதேச மக்களின் தகவல்களுக்கு அமைய, மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் 11 சடலங்களும், மேலும் சில உடற்பாகங்களும் மீட்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மேலும் குறிப்பிட்டார்.