வவுனியா மாவட்டத்தில் பொதுமக்களால் சட்டவிரோதமாக தறிக்கப்பட்ட பெருமளவான மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு தேவைகளுக்காகவும் விற்பனை நோக்குடனும் அங்குள்ள காடுகளில் பொதுமக்கள் சட்டவிரோதமாக மரங்களை தறிப்பதாக வனவளத்துறை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறையிட்டு வந்தனர். இதனையடுத்து வவுனியா பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் பெறுமதிமிக்க பெருமளவான மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரங்களை வெட்டி உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லும்போதே கைப்பற்றப்பட்டதாகவும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரங்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியானதெனவும் வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விறகுப் பாவனைக்காக என கூறி பொதுமக்கள் அதிகளவான மரங்களை வேறு தேவைகளுக்காக வெட்டிச் செல்வதாக வனத்துறை அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடு தொடர்ந்து செல்லுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






