குட்டித் தீவுகளுக்காக சீனாவுடன் முட்டி மோதும் அமெரிக்கா!!

279

Iland

தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த தீவுத் தொகுதியில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவும், அங்குள்ள ஸ்பிரேட்லி தீவுக்கு அருகே செயற்கை தீவு ஒன்றை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா மற்றும் பிற நாடுகள் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.

இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகள், அங்கு நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விடும்’ என்று கூறினார்.

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுனியிங் கூறுகையில், ‘அந்த தீவில் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் நலனுக்காகவே கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பொறுப்பற்ற விமர்சனங்களை வெளிசக்திகள் கூற உரிமையில்லை’ என்று கூறினார்.