இலங்கை கண்டியைச் சேர்ந்த முகம்மது ஜாகீர் உசேன் (37) சென்னையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தமிழக கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
உசேனிடம் போலீஸார் பல கட்டங்களாக விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், துணி வியாபாரம் செய்வதாக போலி பாஸ்போர்ட் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, வெளிநாட்டுத் தூதரகங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைப் புகைப்படங்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
குறிப்பாக, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் நாட்டு துணைத் தூதரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவற்காகப் புகைப்படம் எடுத்திருப்பதும், அந்தப் புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் வழங்கியிருப்பதும் தெரியவந்தது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மட்டுமன்றி ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும் அவர் தகவல் சேகரித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பாக கொச்சி கடற்படைத் தளம், விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்ததாக உசேன் போலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் தளங்களைக் குண்டு வைத்துத் தகர்க்கும் நோக்கத்தோடு தகவல்களைச் சேகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர் தனது வாக்குமூலத்தில் இலங்கைத் தூதரக அதிகாரிகள் அமீர் ஜூபைர் சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகியோரது உத்தரவின்பேரிலேயே இந்தத் தகவல்களைச் சேகரித்ததாகக் கூறியிருந்தார்,
உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் உசேன் சதித் திட்டங்களைத் தீட்டியிருப்பதாகக் குற்றம்சாட்டி கியூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஜாகீர் உசேனின் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு பங்கு இருப்பதால் இந்த வழக்கு தேசியப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரை தேசியப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு வியாழக்கிழமை (நவ.27) விசாரணைக்கு வந்தபோது “நான் பாகிஸ்தான் உளவாளிதான், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரின் தூண்டுதலின் பேரில் இந்தியாவின் இறையாண்மை, பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டேன்” என நீதிபதி மோனியிடம் ஜாகீர் உசேன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளியான ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.