குஷ்புவுக்கு பதவி கொடுத்து அலங்கார பொம்மையாக்க மாட்டோம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு முதல் முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று காலை வந்தார்.
அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் 34,000 கோடி ஒதுக்கியது.
இது தற்போது 23,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிதியை குறைத்தால் பஞ்சாயத்து, தாலுகா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
குஷ்புக்கு பதவி கொடுத்து அலங்கார பொம்மையாக்க மாட்டோம். பதவி மட்டும் அவருக்கு பெருமை தராது. உழைப்பால் மரியாதை பெற்றவர். மக்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்.
வாசன் இடத்தை நிரப்ப குஷ்புவை அழைத்து வந்ததாக கூறுகிறார்கள். அது தவறு, இன்னும் கிராமப்புறங்களில் மூப்பனார், ஜி.கே.வாசன் என்றால் யாருக்கும் தெரியாது. காமராஜர் படம் இல்லாமல் இனிமேல் எந்த நிகழ்ச்சியும் இருக்காது.
ஆனால், மூப்பனார் படம், பெயரை இனி முன்னிலைப்படுத்த மாட்டோம். ஏனென்றால் அவரது பெயரில் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்காக மூப்பனார் எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அவர் என்ன தியாகம் செய்தார் என்பதை ஜி.கே.வாசன் விளக்கட்டும்.
சட்டப்பேரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்காருவதற்கு ஏற்றார் போல் இருக்கை வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, காவிரியில் அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.