துபாய் ஷோப்பிங் மாலில் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த பர்தா அணிந்த பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷோப்பிங் மாலிற்கு இபோல்யா ரியான் (46) என்ற அமெரிக்க ஆசிரியை தனது இரட்டை குழந்தைகளுடன் கடந்த 1ம் திகதி சென்றிருந்தார்.
அங்கு கழிவறை தொடர்பாக அவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பர்தா அணிந்த பெண் ஆசிரியையை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து படுகாயமடைந்த அப்பெண் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
பெரிய வில்லாவில் இருந்த அந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் இருந்த வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான பெண் அமீரகத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் இபோல்யாவை கொன்ற பிறகு ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் கழித்து கார்னிச் பகுதியில் உள்ள அலி அன்ட் சன்ஸ் கட்டிடத்தில் வசிக்கும் 46 வயது எகிப்து-அமெரிக்க டாக்டரின் வீட்டு வாசலில் வெடிகுண்டை வைத்துள்ளார்.
மருத்துவரின் மகன் மாலை நேர தொழுகைக்கு மசூதிக்கு செல்கையில் வாசலில் வெடிகுண்டு இருந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து வெடிகுண்டை செயலழிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி வீடியோவில் அந்த பெண் செய்த குற்றங்கள் பதிவாகியுள்ளன. அவர் பர்தா அணிந்து மாலுக்குள் நுழைவது, கொலை செய்த பிறகு தப்பித்து ஓடுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.
அதன் பின்பு கருப்பு நிற பெட்டியை இழுத்துக் கொண்டு டாக்டரின் வீட்டுக்கு செல்வது, அதே பெட்டியுடன் அங்கிருந்து வெளியே வந்து காரில் செல்வது, காரில் உள்ள நம்பர் பிளேட்டை அமீரக கொடியால் மறைத்தது உள்ளிட்டவையும் கமெராவில் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து இந்த வழக்கை தீவிரவாத வழக்காக கருதி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குறித்த பெண்ணுக்கும், தீவிரவாத இயக்கத்திற்கும் தொடர்பிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.