13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – இந்தியா..

449

Salman Khurshid
இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் சரத்துக்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அவற்றுக்கு அப்பாலும் சென்று அந்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா இலங்கைக்கு கூறியுள்ளது.
தமிழர்கள் அதிகமாக வாழும் வட மாகாணத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இந்தியாவின் இந்த கூற்று வந்திருக்கிறது.

இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையின் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்துள்ளார். அப்போது இலங்கையின் வட மாகாணத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயத்தை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் பசில் ராஜபக்ஷ தெரிவித்த போதே, இந்தியாவின் இந்தக் கருத்தை குர்சித் அவர்கள் இலங்கை அமைச்சரிடம் கூறியுள்ளார்.

வடமாகாண தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து தனது வரவேற்பை தெரிவித்த இந்திய அமைச்சர் குர்சித் அவர்கள், அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கும் அப்பாலும் சென்று இலங்கையில் அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் எதுவும் செய்யப்படக் கூடாது என்றும் அவர் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது பங்குக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டங்கள் குறித்து இலங்கை அமைச்சர் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார். இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மிகவும் சிறப்பாக செயற்படுவது குறித்து, குறிப்பாக இந்தியாவின் வீடமைப்புத் திட்டம் குறித்து, இலங்கை மக்கள் மத்தியில் பரந்துபட்ட வரவேற்பு இருப்பதாகவும் இலங்கை அமைச்சர் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடமாகாண தேர்தலுக்கு முன்னதாக, மாகாணங்களுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக வந்த செய்திகள் பற்றிய கவலைகள் பற்றி அண்மையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அவர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் குர்சித் அவர்கள், 13வது திருத்தம் மாற்றப்படாமல் இருப்பதன் தேவை குறித்து அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தச் சட்டம் தொடர்பாக இலங்கை முன்னதாக தெரிவித்த கரிசனைகளுக்கு மாறாக, இலங்கை எதுவும் செய்யக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

-BBC தமிழ்-