லண்டன் ஹீத்ரூ விமான நிலையப் பகுதியில் பறந்த ஆளில்லா விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, பிரித்தானிய விமான நிலையம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஹீத்ரூ விமான நிலையத்தில் ஏர்பஸ் 320 விமானமொன்று 700 அடி உயரத்தில் பறக்கும் போது, அதன் பைலட், அப்பகுதியில் ஆளில்லா விமானம் பறப்பதைக் கண்டார், இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
இது குறித்து அவர் உடனடியாக, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கியுள்ளார். ஆளில்லா விமானம், அப்பகுதிக்குள் நுழைந்ததை விமான நிலையத்தின் ரேடார் கருவி கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன் பின்னர் அந்த ஆளில்லா விமானம் சுவடின்றி மறைந்து விட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.
பயணிகள் விமானங்களுக்கு ஆளில்லா விமானங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஏற்கெனவே பல தரப்பிலிருந்தும் கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆளில்லா விமானங்களை கிறிஸ்துமஸ் பரிசாக அளிப்பது புதிய வழக்கமாகி வருகிறது.
பிரித்தானியாவில் ஆளில்லா விமானங்கள் 35 பவுண்ட் முதல் 3,350 பவுண்ட் வரை விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.