கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது.
சாதாரண தரப் பரீட்சை நிலையங்களை அண்டிய பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சை விடைத்தாள்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்படும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்துப் பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 4279 பரீட்சை நிலையங்களில் ஐந்து லட்சத்து எழுபதாயிரத்து இருநூற்று இருபது பேர் பரீட்சையில் தோற்ற உள்ளனர்.
இதில் 370, 000 பரீட்சார்த்திகள் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 18ம் திகதி வியாழக்கிழமை வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என புஸ்பகுமார சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.