லிங்கா படத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

512

Linga

ரஜினி-அனுஷ்கா-சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படம் வரும் டிசம்பர் 12ம் திகதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், தெலுங்கு மொழியில் நடிகர்கள் சிரஞ்சீவி, சோனாலி பிந்த்ரே உள்பட பலர் நடித்த இந்திரா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளேன். இந்த படத்தின் கதையும், ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளது.

இந்திரா படத்தின் கதையை அப்படியே எடுத்து லிங்கா படத்தை எடுத்துள்ளனர். எனவே, லிங்கா படம் வெளியானால் எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்திரா மற்றும் லிங்கா படங்களை பார்த்து கதை குறித்து முடிவு செய்ய வக்கீல் கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.



இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், லிங்கா படத்தின் இயக்குனர் பணியை மட்டுமே செய்துள்ளேன். தெலுங்கில் வெளியான இந்திரா படத்தின் கதைக்கும் லிங்கா படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியாவில் உள்ள அணைகள் குறித்து திரைப்படம் எடுக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமென்றாலும் கதை மற்றும் திரைக்கதையை எழுதலாம்.

இந்த வழக்கை தொடர்வதன் மூலம், லிங்கா படத்தில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டும் விதமான நடவடிக்கையில் மனுதாரர் இறங்கியுள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுப்பையா, லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணை வருகிற 12ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.