வவுனியா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களிலும் வீதி விளம்பர பலகைகளிலும் அரச கரும மொழியைப் பயன்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் தினமான இன்று கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நகரசபையிடம் மனுகையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்- இன்று மனித உரிமை தினமாகும். இன்றைய தினத்தில் எமது மொழி உரிமையைப் பெறும் நோக்குடன் முதல் கட்டமாக வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச, தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்தவும், வர்த்தக விளம்பர பலகைகளிலும் இரு மொழிகளை அமுல்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
வவுனியா மாவட்டம் மூவின மக்களைக் கொண்ட இரு மொழி பேசும் பகுதியாகும். ஒரு மொழியைப் பயன்படுத்துவதால் எமது மொழி உரிமை மீறப்படுகிறது. எனவே இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளோம். இதனை வவுனியா நகரசபை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்தி உதவுமாறு கேட்டுள்ளோம் என்றனர்.
வவுனியா நகரசபை வாயிலில் இருந்து ஊர்வலமாக சென்ற ஏற்பாட்டாளர்கள் நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் என்.எஸ்.கிருஸ்ணனிடம் மனுவைக் கையளித்தனர். இதில் மொழிச் சங்க உறுப்பினர்கள், மொழி ஆர்வலர்கள், கிராம முகாமைத்துவத்திற்கான சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.