இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று பகல் புணாணையிலுள்ள படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றன.
இந்தப் பயிற்சி நிறைவு நிகழ்வில், பிரதம அதிதியாக 23 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டி.டி.யு.கே.ஹேட்டியாராய்ச்சி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதைகளையும் மரியாதை வேட்டுக்களையும் ஏற்றுக் கொண்டார்.
பயிற்சிகளை நிறைவு செய்தவர்களில் 31 தமிழ் இளைஞர்களும் 7 முஸ்லிம் இளைஞர்களும் அடங்குகின்றனர். நாடு பூராகவும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் நேற்று மூன்றரை மாத பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் பயிற்சியின் போது தமது திறமைகளைக் காண்பித்த இராணுவ வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
புதிய இராணுவ வீரார்களின் அணிவகுப்புகளை அடுத்து, பாண்ட் வாத்திய அணியினரின் இசை நிகழ்வும், இராணுவத்தினரின் விசேட உடற் பயிற்சி அணிவகுப்பும் நடைபெற்றது.
கொட்டும் மழையில் நடைபெற்ற இராணுவத்தினரின் பயிற்சி நிறைவு நாள் அணிவகுப்புகளின் போது அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.