வவுனியா, சிதம்பரபுரம் முகாம் மீது அருகில் இருந்த மரம் அடியோடு பாறி விழுந்ததால் முகாம் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் மீண்டும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வவுனியா, சிதம்பரபுரம் முகாம் ஒன்றின் அருகில் இருந்த மரம் ஒன்று நேற்று புதன்கிழமை முகாமின் மேல் பாறி விழுந்துள்ளது.
இதனால் முகாமின் கூரைப் பகுதி உட்பட அதன் சுவர்களும் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. சம்பவத்தின் போது குறித்த முகாமுக்குள் இருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். விக்கினேஸ்வரன் புஸ்பராணி (47) என்ற பெண்ணே காயமடைந்தவராவார். இவர் தற்போது சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.