கொமடி நடிகர் வடிவேலு மகன் திருமணத்தில் கொஞ்சம் கலாட்டா நடந்துள்ளது. வடிவேலுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், வி.சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர்.
சுப்பிரமணிக்கும், திருப்புவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வி.புவனேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது.
இவர்கள் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது இந்த திருமணத்துக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை.
வடிவேலுவின் சொந்த ஊரான ஐராவதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் பொலிசார் திருமண மண்டபத்திற்குள் திடீரென புகுந்தனர்.
அவர்கள் மணமகள் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
புவனேஸ்வரி மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்துவதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது எனவும் கூறப்பட்டது.
விசாரணைக்கு ஒத்துழைத்த நடிகர் வடிவேலு சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு திருப்புவனம் பள்ளியில் புவனேஸ்வரியின் சான்றிதழை ஆய்வு செய்யும்படி கேட்டார்.
அப்போது புவனேஸ்வரிக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்கள் ஆகிவிட்டன என்பது உறுதி செய்யப்பட்டது. யாரோ உள்நோக்கத்துடன் புகார் செய்திருப்பதாக பொலிசாரிடம் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.இதையடுத்து பொலிசார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.