இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி வழங்கி சந்தர்ப்பத்தை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் இலங்கை சார்பில் குமார் சங்கக்கார 91 ஓட்டங்களையும் மத்திவ்ஸ் 40 ஓட்டங்களையும் தில்ஷான் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் பெற்று வெற்றியடைந்தது.
இங்கிலாந்து சார்பில் டெய்லர் 68 ஓட்டங்களையும் ரூட் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இலங்கை மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.