அவுஸ்திரேலிய-இந்திய வீரர்களிடையே கடும் வாக்குவாதம்!!(வீடியோ)

407

kholi

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே இருமுறை மைதானத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ஆட்டத்தின் 34வது ஓவரை வீச வருண் ஆரோன் அழைக்கப்பட்டார். அப்போது டேவிட் வார்னர் அந்த ஓவரின் 3வது பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.

இதனை வருண் ஆரோன் `கமோன் க மோன்’ என்று ஆக்ரோஷமாகக் கத்தி கொண்டாடினார். வார்னரும் குனிந்த தலையோடு பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். ஆனால் நடுவருக்கு தவறான பந்து என்ற சந்தேகம் எழ வார்னரை நிற்கச் சொன்னார்.



பிறகு அது தவறான பந்து எனத் தெரிந்தது. வார்னர் உடனே க்ரீஸிற்கு திரும்பினார். அவர் சும்மா இல்லாமல் ‘கமோன் கமோன்’ என்று வருண் ஆரோனை நோக்கி கத்திய படியே வந்தார்.

மேலும் ஒரு பந்தை எதிர்கொண்ட பிறகும் `கமோன் கமோன்’ என்று மீண்டும் ஆரோனை வெறுப்பேற்றினார். இது தவானுக்கு பிடிக்காமல் போக அவருக்கும் வார்னருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இதனையடுத்து சில வீரர்களும் அணித்தலைவர் விராட் கோலியும் சமாதானம் செய்ய நேரிட்டது. அதன் பிறகு சமாதானமாக ஆட்டம் சென்றது.

பிறகு, தேநீர் இடைவேளைக்குப் பிறகு வட்சன், மைக்கல் கிளார்க் விக்கெட்டுகள் விழுந்த பிறகு மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டது. இந்த முறை ரோஹித் சர்மா நாயகன் ஆனார்.

ரோஹித் சர்மா வீசிய ஒரு பந்தை மேலேறி வந்து ஸ்டீவன் ஸ்மித் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவருக்கு சிக்கவில்லை. பந்து அவரைக் கடந்து சென்று விடும் என்ற அச்சத்தில் இயல்பாக காலை நீட்டி அந்தப் பந்தை துடுப்பால் தடுத்தார் ஸ்மித். அது விக்கெட் என்பதற்கு வழியே இல்லை.

ஆனால், ரோஹித் நடுவரிடம் முறையீடு செய்தார். இது முழுவதும் நடுவருக்கும் பந்துவீச்சாளருக்கும் இடையிலானது. ஆனால் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ஸ்டீவன் ஸ்மித் அங்கிருந்து ரோஹித் சர்மாவை நோக்கி ஏதோ கூற, ரோஹித் சர்மா பதிலுக்கு ‘வாட், வாட்’ என்று இருமுறை கோபமாக பேசினார்.

இதனையடுத்து மீண்டும் கோலி, நடுவர்கள், ரோஹித் சர்மா, புஜாரா, வார்னர் ஆகியோரிடையே சில பல வார்த்தைகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் வழக்கமான ஆக்ரோஷ சொற்பிரயோக அணுகுமுறைக்குத் திரும்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.