தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
திருப்பூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் என்ற சங்கத்தை கடந்த 1990ம் ஆண்டு உருவாக்கினார்கள், இதன் தலைவராக இருப்பவர் எஸ்.எஸ்.முருகேஷ்.
இச்சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் நடந்தது.
திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்பட 14 மாவட்டத்தைச் சேர்ந்த மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சங்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என முடிவு செய்யப்பட்டதுடன், சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கட்சியில் ரஜினிகாந்தின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்துவது இல்லை என்றும், ரஜினிகாந்தின் பெயருக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தாமல் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.முருகேஷ் நியமிக்கப்பட்டார். கட்சியின் கொடியை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வெளியிட்டார். நீலம், வெள்ளை, சிவப்பு நிற கொடியின் மத்தியில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இதில் காந்திஜி, நேதாஜி, பெரியார், காமராஜர் படம் அச்சிடப்பட்டு உள்ளது.