சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி போட்டியின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் சட்டையை கழற்றி தவறான செயல்களில் ஈடுபட்டனர்.
சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதிப் போட்டி ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் காலிறுதியில் பெல்ஜியத்தை வென்ற இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
போட்டியை வென்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள் அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை பார்த்து நடுவிரலைக் காட்டி, தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் ஷெனாஸ் ஷேக் முயற்சி செய்தும் பாகிஸ்தான் அணி வீரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் குழந்தைகள் போன்று நடந்து கொண்டனர் என்றும், நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் ஷேக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.