நடிகர் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தின் வெற்றிவிழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா பாளை பெல் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார்.
விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி வழங்கி பேசினார். விழா மேடைக்கு வந்ததும் விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். மேடை முன்பாக போடப்பட்டிருந்த நீண்ட நடைமேடையில் வந்து ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவரை காண நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
விழாவில் விஜய்க்கு ரசிகர்கள் சார்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது..
ஒரு மனிதன் வாழ நிறைய தேவைகள் உள்ளன. முக்கியமான 3 தேவைகள் நெல்லை மண்ணில் உள்ளது. ‘திரு’ என்றால் மரியாதை, ‘நெல்’ என்றால் உணவு, ‘வேலி’ என்றால் பாதுகாப்பு. இதுதவிர 4வதாக ஒன்று உள்ளது. அதுதான் அல்வா.
நெல்லுக்கு வேலி கொடுத்த சாமிக்கு கோவில் கட்டி கும்பிடுவது திருநெல்வேலியில்தான். விவசாயத்துக்கு பெயர் பெற்ற நெல்லையில் கத்தி பட வெற்றி விழா கொண்டாடப்படுவது பெருமையாக உள்ளது.
வெற்றிக்கும், தோல்விக்கும் வித்தியாசம் உள்ளது. கடமையை செய்தால் வெற்றி. கடமைக்கு செய்தால் தோல்வி. இயக்குனர் முருகதாஸ் தனது கடமையை சரியாக செய்ததால் கத்தி படம் வெற்றி பெற்றுள்ளது. நானும் நடிகனாக எனது கடமையை சிறப்பாக செய்துள்ளேன்.
சினிமா என்பது கால்பந்து விளையாட்டை போன்றது. பத்து பேரின் பங்களிப்பு இருந்தால்தான் ஒரு கோல் போட முடியும். ஒருவர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு கோல் போட 11 பேர் தடுப்பார்கள். பல மடங்கு எதிர்ப்பு இருக்கும். அதுதான் வாழ்க்கை. தட்டிபறிப்பவர்கள் வாழ்ந்ததில்லை. விட்டு கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை.
இன்றைய உலக சூழலில் தட்டியும் பறிக்க வேண்டாம், விட்டும் கொடுக்க வேண்டாம். வெட்ட வரும் எதிரியை அவர்கள் பாதையிலே சென்று தடுக்க வேண்டும். நல்லவன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என அனுபவத்தை கொடுக்கிறான். கெட்டவன் அவமானத்தை கொடுக்கிறான்.
என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். குடும்பத்தை கவனிக்காமல் என் படத்தை மட்டும் ரசிக்கும் ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. எல்லோருக்கும் குடும்பம் முக்கியம். மனைவி கடவுள் தந்த வரம். தாய் கடவுளுக்கு நிகரான வரம். நண்பன் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம். எனவே அந்த உறவுகளை யாரும் இழந்துவிடக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலானவர்கள் நீங்கள்.
காசு கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் எனக்கு முதலாளிதான். 100 கோடி மக்கள் நிறைந்த இந்தியாவில் யாரோ ஒருவனாக வாழ இருந்த என்னை இன்று வெற்றி நாயகனாக்கி உயர்த்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் பேசினார்.