வவுனியா நெளுக்குளம் – செட்டிகுளம் பிரதான வீதி சீரின்மையால் மக்கள் விசனம்!!

859

வவுனியா நெளுக்குளத்தின் ஊடாக செட்டிக்குளம் செல்லும் பிரதான வீதி திருத்தப்படாமையினால் பயணம் செய்யும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளாகியும் இவ்வீதி திருத்தப்படவில்லை. வீதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. விநாயகபுரம், இராசேந்திரகுளம், சூடுவெந்தபுலவு, பாவற்குளம், உலுக்குளம், வீரபுரம் என பல கிராம மக்கள் வவுனியா நகரத்திற்கு செல்வதற்கு பிரதான வீதியாக இது அமைந்துள்ளது.

பாடசாலை செல்வோர் வியாபாரம் செய்வோர் பொருட்களை கொள்வனவு செய்ய நகரத்திற்கு செல்வோர், மற்றும் மாவட்ட வைத்தியசாலை செல்வோர் என பல தரப்பட்டவர்களும் இவ்வீதி திருத்தப்படாமையினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

துவிச்சக்கர வண்டியில் பயணிப்பவர்கள் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனாலும் குளம் போல வெள்ளம் நிறைந்திருப்பதனாலும் விழுந்து எழும்பி செல்ல வேண்டிய நிலையும் காணப்படுவதாக மக்கள் தெரிவிகிகின்றனர்.

குறிப்பாக விநாயகபுரம், இராசேந்திரகுளம், பாவற்குளம் முதலான வீதிகள் பயணிக்க முடியாத நிலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை பல மாதங்களுக்கு முன்னர் குன்று குழிகள் மூடப்படுவதற்கு வீதியில் கொட்டப்பட்ட கிரவல் மண் பரவப்படாத நிலை காணப்படுகின்றது.

வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வீதி மேடு பள்ளமாக காணப்படுகின்றது இதனால் பிரயாணம் செய்பவர்களும் வாகன சாரதிகளும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

வவுனியா தெற்கு பிரதேச சபை,வெங்கலச்செட்டிகுள பிரதேச சபை வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்வீதியை திருத்துவதற்கு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

1 2 3