இலங்கை அணி படுதோல்வி : தொடரை 2-0 எனக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி!!

270

NZ

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நியூசிலாந்துக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதில் முதலாவதாக நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் இடம்பெறுகின்றது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 3ம் திகதி வெலிங்டனில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 69 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

மேலும் மற்றைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் வரிசையாக வெளியேற, அந்த அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இலங்கை சார்பில் அபாரமாக பந்துவீசிய நுவன் பிரதீப் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். மேலும் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் மத்தியூஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 203 ஓட்டங்களை விளாசினார். மேலும் தினேஷ் சந்திமால் 67 ஓட்டங்களை குவிக்க, 356 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி இலங்கை 135 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க, தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஐந்து விக்கெட் இழப்பிற்கு 524 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. கேன் வில்லியம்சன் 242 ஓட்டங்களையும், வட்லிங் 142 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது விளாசினர்.

இதனையடுத்து 390 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குஷல் சில்வா 50 ஓட்டங்களையும், திரிமான ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றனர்.

ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை 192 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-0 என நியூசிலாந்து வசமானது.