ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் மும்பை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

807

bomb-threat

மும்பை விமான நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதை தொடர்ந்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மிரட்டல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையில் ‘10.1.2015 அன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவோம்’ என்று கையால் எழுதப்பட்டு இருந்தது. இது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கவனத்துக்கு வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக அந்த வாசகத்தை ஆய்வு செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விமான நிலைய பணிப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். கழிவறை சுவரில் யார் இவ்வாறு எழுதியது என்பதை ஆராய விமான நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

மும்பை விமான நிலையத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருப்பதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வருகிற 26–ந் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருவதால், இந்த சம்பவம் அவரது வருகையை சீர்குலைக்கும் சதி என கருதப்படுகிறது.

சமீபத்தில், தானேயை சேர்ந்த 4 என்ஜினீயரிங் மாணவர்கள் ஈராக் நாட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் சிரியா மற்றும் ஈராக் நாட்டில் ஆயுதம் ஏந்தி போராடி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்ததாக பேசப்பட்டது. இதையடுத்து, அவர்களில் ஆரிப் மஜீத் என்பவர் மட்டும் மும்பை திரும்பினார்.

உடனடியாக அவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். தீவிரவாதிகளை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.