ஒகேனக்கல் குடிநீர் திட்ட அடிக்கல்லை நாட்டியது யார் என்பதை மட்டும் ஜெ. கூறவில்லையே: கருணாநிதி

527

krs_thumb

சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதை முதல்வர் ஜெயலலிதா துவக்க விழாவில் கூறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க இருந்ததை வரவேற்றிருந்தேன். ஆனால் தொடக்க விழாவில், வழக்கம்போல் திமுக ஆட்சி மீது முதல்வர் குறை கூறியுள்ளார். 1994-ஆம் (அதிமுக ஆட்சி) ஆண்டு ரூ.350 கோடி மதிப்பில் ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், போதிய நிதி உதவி கிடைக்காததன் காரணமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தாமதம் ஏன்? அதிமுக ஆட்சியில் போதிய நிதி திரட்ட இயலவில்லை என்றால் எதற்காக திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்? இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்துக்காக நிதி உதவி கேட்டு மத்திய அரசுக்கு 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-இல் கருத்துரு அனுப்பப்பட்டது என்று முதல்வர் கூறியுள்ளார்.

 

இரண்டாம் முறையாக அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது 2001-ஆம் ஆண்டு. ஆனால் 2005-ம் ஆண்டு தான் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. கருத்துரு அனுப்பாமல் 4 ஆண்டுகள் அதிமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறிய முதல்வர், அது திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதை மட்டும் விழாவில் கூறவில்லை. நிறுத்தி வைத்தது ஏன்? இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, கர்நாடகத்தில் பாஜக போராட்டம் நடத்தியது என்று குறிப்பிட்ட முதல்வர், அப்போது நான் (கருணாநிதி) கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் நாம் கலந்து பேசி தேவைப்பட்டால் களம் காண்போம் என்று கூறி திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக பேரவையில் கேள்வி கேட்க முயன்ற ஜெயலலிதாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஒகேனக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, கர்நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இல்லை. ஆளுநர் ஆட்சி தான் நடைபெற்றது. பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் பாஜக சார்பில் கர்நாடகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர் கடைகள் நாசமாக்கப்பட்டன. பஸ்கள் கொளுத்தப்பட்டன. தமிழ்த் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த நேரத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்பு கோரி, சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், தமிழர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. கர்நாடக பாஜகவின் செயல்களைக் கண்டித்து சேப்பாக்கத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவராக இருந்த கேர்.ஆர்.ஜி. தலைமையில் நடந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர்.

 

இந்தப் பிரச்னை காரணமாக இரண்டு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவானது. இந்த நேரத்தில் கர்நாடகத்தில் ஓர் ஆட்சி அமைய சில நாள்கள் மட்டுமே இருந்த நிலையில், அதுவரை தாற்காலிகமாக அமைதி காப்போம் என்றும், அதற்குப் பிறகும் நிலைமை நீடிக்குமானால் பொறுமையாக இருக்கத் தேவையில்லை என்றும் முதல்வராக இருந்த நான் (கருணாநிதி) அறிக்கை விடுத்தேன் என்பது உண்மைதான். இவ்வாறு நான் அறிக்கை வெளியிடாமல் அமைதியாக இருந்திருந்தால், கர்நாடகத்தில் தமிழர்களுக்குப் பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கும். தமிழர்களைக் காப்பதற்காக முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கையைத்தான் முதல்வர் ஜெயலலிதா பெரிய புகாராக திட்டத்தையே கைவிட்டதுபோல கூறியுள்ளார். அப்போது நான் எடுத்த முடிவை பத்திரிகைகள் பாராட்டின. மேலும் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகே உரிமை மீறல், ஒத்திவைப்பு போன்ற பிரச்னைகளை எழுப்ப முடியும். ஆனால் அதிமுகவினர் பேரவை தொடங்கிய உடனேயே பிரச்னையை எழுப்பினர். பேரவை விதி தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறியும், அவர்கள் கேட்காமல் வெளிநடப்பு செய்து, பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்று பேரவைக்கு வெளியில் அதிமுகவினர் கூறினர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.