8 லட்சம் ரூபா பணத்துக்கு ஆசைப்பட்டு 35 ஆயிரம் ரூபாவை இழந்த நபர் : யாழில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

264

இனந்தெரியாதோரின் அழைப்பை நம்பி 8 லட்சம் ரூபா பரிசுப் பணத்துக்கு ஆசைப்பட்ட நபர், அவரின் அறியாமையால் 35 ஆயிரம் ரூபாவை இழந்தார். இந்தச் சம்பவம் யாழ். ஊரெழுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவபவை..

ஊரெழுவை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று திங்கட்கிழமை காலையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தாம் ‘டயலொக்’ நிறுவனத்தில் இருந்து பேசுகிறார் என்றும் தங்களுக்கு 8 லட்சம் ரூபா பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த 2ம் திகதி தாம் அனுப்பிய குறுந்தகவல் ஒன்றுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை என்றும் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த தொலைபேசி உரிமையாளர் தாம் அந்த குறுந்தகவலை கவனிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு அழைப்பை ஏற்படுத்தியவர் அந்தக் குறுந் தகவலுக்கு நீங்கள் பதில் அளிக்காததால் நீங்கள் பரிசுத் தொகையை இழக்க வேண்டி ஏற்படுகிறது எனத் தெரிவித்திருக்கிறார். அத்துடன் நீங்கள் அந்தப் பரிசுத் தொகையை பெற வேண்டுமானால் இன்றைய தினமே (நேற்று) இறுதிநாள். இல்லையேல் அந்தப் பணத்தை வன்னிப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி விடுவோம் எனக் கூறினார்.

தொலைபேசி உரிமையாளர் தாம் பரிசுப் பணத்தைப் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். இதற்கு நீங்கள் 25 ஆயிரம் ரூபாவைக் கட்டுங்கள் நாம் உங்களுக்கே பரிசுப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என அழைப்பை ஏற்படுத்தியவர் சொன்னார்.

இதை நம்பியவர் 25 ஆயிரம் ரூபா பணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் தொலைபேசியில் பேசியவர் கூறிய நேரத்துக்குள் 15 ஆயிரம் ரூபாவே திரட்ட முடிந்தது.

இதையடுத்து அவர் அழைப்பு வந்த இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி தம்மிடம் 15 ஆயிரம் ரூபாவே இருக்கிறது எனத் தெரிவித்தார். முதலில் 15 ஆயிரம் ரூபாவை ‘ஈ – சற்’ மூலமாக அனுப்பி வையுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

15 ஆயிரம் ரூபாவை அனுப்பிய தொலைபேசி உரிமையாளருக்கு சிறிது நேரத்தில் மீண்டும் சிறிது நேரத்தில் அழைப்பு வந்துள்ளது. முன்னர் பேசிய நபரே மீண்டும் பேசினார்.

பேசியவர் தொலைபேசி உரிமையாளரை திருநெல்வேலி பகுதிக்கு மேலதிகமாக 5 ஆயிரம் ரூபாவுடன் எல்லாமாக 15 ஆயிரம் ரூபாவுடன் வருமாறும் அங்கிருந்து ஈ-சற் மூலம் பணத்தை அனுப்புமாறும் தெரிவித்திருக்கிறார்.

தொலைபேசி உரிமையாளர் மீண்டும் 15 ஆயிரம் ரூபாவை வழங்கியிருக்கிறார். அத்துடன் இன்னமும் 5 ஆயிரம் ரூபா மேலதிகமாக செலுத்துமாறு கூறவே அதையும் செலுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் பணத்தை அனுப்பியவருக்கு தெலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர் இன்னும் 15 ஆயிரம் ரூபா பணத்தை அனுப்பினாலே பரிசுப் பணம் கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நகைகளை அடகு வைத்துப் பணம் வாங்கி அதை செலுத்த முற்பட்ட போதே குறித்த நபருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவர் டயலொக் நிறுவனத்துக்கு சென்று விசாரித்த போதே அவர் ஏமாற்றப்பட்டமை தெரிய வந்தது. இந்த விடயம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான ஏமாற்றும் நபர்களை நம்ப வேண்டாம் என்றும், பரிசுத் தொகைகளுக்கு தாம் பணம் பெறுவதில்லை என்றும் டயலொக் நிறுவனம் விழிப்புணர்வுப் பிரசாரங்களை செய்து வருகின்ற போதிலும் இவ்வாறான ஏமாற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.