புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பம்..

475

Ashes

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் (ஓவல் மைதானம்) டெஸ்ட் போட்டியில் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் திகதி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் இந்த முதல் தோல்வியை அந்த நாட்டு பத்திரிகை ஒன்று கடுமையாக விமர்சித்து இருந்தது.

அதில் இங்கிலாந்து கிரிக்கெட்டை, அவுஸ்திரேலிய அணி கொன்று அதன் பிணத்தை எரித்து சாம்பல்களை (ஆஷஸ்) அதன் சொந்த நாட்டுக்கு எடுத்து சென்று விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

அன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இரு நாடுகள் இடையேயான பாரம்பரியமும், கௌரவமும் மிக்க இந்த போட்டி தொடருக்கு இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆர்வமும் நிலவுகிறது.

இந்த டெஸ்ட் போட்டி தொடர் தற்போது 5 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது.

இந்த போட்டி தொடரில் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி அதிக வெற்றிகளை குவித்தாலும், பின்னர் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது.

ஆனால் கடந்த 2009-ம் ஆண்டு (2-1), 2011-ம் ஆண்டு (2-1) ஆகியவற்றில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தொடரை கைப்பற்றி வலுவாக விளங்குகிறது.

இந்த ஆண்டுக்கான ஆஷஸ் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் அலஸ்டயர் குக் தலைமையில் இங்கிலாந்து அணியும், மைக்கேல் கிளார்க் தலைமையில் அவுஸ்திரேலிய அணியும் கோதாவில் குதிக்கின்றன.

இரு தலைவர்களும் தலா 92 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர். இருவருமே தங்களது அறிமுக டெஸ்டில் சதம் கண்டதுடன் உலக தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களாக விளங்கி வருகிறார்கள்.

இரு அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றும் இருப்பதால் இந்த போட்டி தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூரில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் தர வரிசையில் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி 4-வது இடத்திலும் உள்ளன.

இந்த போட்டி குறித்து அவுஸ்திரேலிய அணி தலைவர் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,

“இந்த போட்டி தொடர் எனது தலைமைத்துவ திறனை முடிவு செய்யும் என்று சொல்வதை நான் நம்பவில்லை. எல்லா நேரங்களிலும், எந்த அணிக்காகவும் விளையாடினாலும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

அந்த மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆஷஸ் தொடருக்கு கடுமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லா முறையும் அணி வெல்ல வேண்டியது என்பதே எனது விருப்பமாகும்” என்றார்.

இதேவேளை, இங்கிலாந்து தலைவர் அலஸ்டயர் குக் கூறுகையில், “இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இரு தரப்பிலும் இருக்கிறது. அதற்காக இந்த போட்டி கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு என்று நான் நினைக்கவில்லை. ஆஷஸ் தொடரை வென்ற பசுமையான நினைவுகள் உள்ளன. அந்த வெற்றியை தொடர முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆஷஸ் தொடருக்கான இரு நாட்டு அணிகள் வருமாறு:-

அவுஸ்திரேலியா: மைக்கல் கிளாக் (தலைவர்), பிராட் ஹாடின், ஷேன் வட்சன், எட்கோவன், டேவிட் வார்னர், பில் யூக்ஸ், ஸ்டீவ் சுமித், உஸ்மான் ஹவாஜா, மத்யூ வேட், ஜேம்ஸ் பவுல்க்னெர், நாதன் லயன், பீட்டல் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ரையான் ஹாரிஸ், ஜாக்சன் பேர்டு.

இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (தலைவர்), ஜோ ரூட், ஜோனதன் டிராட், கெவின் பீட்டர்சன், இயன்பெல், பேர்ஸ்டோவ், மாட் பிரையர், டிம் பிரிஸ்னன், ஸ்டூவட் பிராட், ஸ்வான், ஸ்டீவன் பின், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரகம் ஆனியன்ஸ்.