இந்தியாவின் 66வது குடியரசு தின விழா!!

373

Republic day

இந்தியாவில் இன்று 66வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில் இன்று குடியரசு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று காலை மழை காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் சற்று தாமதமாக தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல் நபராக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அழைத்து வரப்பட்டார், இவர் அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் ராணுவ அணிவகுப்பு நடக்கும் விழா மேடைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, அவருடைய மனைவி மிச்செல் வந்தனர். இவர்களை வரவேற்று அழைத்து வந்த மோடி, மத்திய அமைச்சர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து சரியாக காலை 10 மணிக்கு குதிரைப்படை அணிவகுக்க அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி வரவேற்றார்.

தேசிய கீதம் ஒலிக்க காலை 10.05 க்கு ஜனாதிபதி தேசிய கொடியேற்றி வைத்தார். ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் எழுந்து நின்று சல்யூட் அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.