மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

286

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய ஜனாதிபதியின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா ஆகியோரின் புகைப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிந்த பதாதைகளில் காணப்பட்டன.

2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் கிழக்கு, தென்கிழக்கு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலிருந்தும் பட்டதாரிகளாக வெளியேறியவர்களே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா,ஞா.வெள்ளிமலை ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகர் ஊடாக பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உ.உதயவேந்தன்,

தமது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாங்கள் இன்று பல துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றோம்.

அவற்றினை கருத்தில் கொண்டும் எமது நிலையின் உண்மைத் தன்மையும் கருத்தில் கொண்டு உடனடியாக புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் எங்களுக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றோம். உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

1 2 3 4