இந்திய அணி படுதோல்வி : முத்தரப்பு தொடரிலிருந்து வெளியேறியது!!

250

Ind

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும், ரஹானேவும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். தவான் 38 ஓட்டங்களை எடுத்திருந்தபோது வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பின்னர் நிதானத்துடன் விளையாடிய ரஹானேவும் 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது ஷமி 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

வெற்றிக்கு 201 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பெல்லும், மொயீன் அலியும் களமிறங்கினர்.
இருவரும் பெரிதும் சோபிக்காத நிலையில் அடுத்தடுத்து 10 மற்றும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்து வந்த டெய்லர் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். ஆனால் அடுத்து வந்த ரூட் (3), மோர்கன் (2), பொபாரா (4) பின்னியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 66 ஓட்டங்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டெய்லர் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் 67 ஓட்டங்கள் குவித்த பட்லரும் ஆட்டமிழந்தார்.

எனினும் பொறுமையாக விளையாடிய வோக்சும், பிராடும் ஆட்டமிழக்காமல் 46.5 ஓவரிலேயே 201 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணி முத்தரப்பு தொடரிலிருந்து வெளியேறியது.

வரும் பிப்ரவரி 1 ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.