தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன்

377

18826811871

மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி சுதந்திர தின வைபவத்தில் ஆற்றிய உரையின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றிருப்பதாகவும், அத்தகைய உறவு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் வடமாகாண முதலமைச்சர் கூறினார்.

அதேவேளை, ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தில், தமிழ் மக்களால் பார்க்கக் கூடிய வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து, இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக ஜனாதிபதியின் தலைமையில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடற்படைத் தளபதி மற்றும், வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர், உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட உயர் மட்ட கூட்டத்தில் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை பாக் நீரிணையில் இரு நாட்டு அரசாங்கங்களும் தடை செய்ய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆலோசனை கூறியுள்ளார்.

இழுவைப்படகில் மீன்பிடிப்பவர்களை அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற் பரப்புக்களில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்வதற்காக அனுப்ப வேண்டும் என்றம், அவ்வாறு செய்வதன் மூலம், இருநாட்டு மீனவர்களும் பாக் நீரிணையில் தமது பாரம்பரிய கடற்தொழிலை எதுவித பாதிப்புகளும் பிரச்சினையுமின்றி மேற்கொள்ளலாம் என தான் இந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த யோசனையை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடமாகாண ஆளுனர் பலிஹக்கார ஆகியோர் வரவேற்றுள்ளதாகவும், இந்த யோசனையை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் என வடமாகாணா ஆளுனர் குறிப்பிட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதையடுத்து, இந்தியப் பிரதமருடன் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்கு வசதியாக விபரங்களைக் கேட்டறியும் வகையில் இந்த உயர் மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.