இளவரசன் உடல் மறு பிரேதப் பரிசோதனை – தீர்ப்பு தள்ளிவைப்பு..

535

ilavarasan

தர்மபுரி இளைஞன் இளவரசனின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமா என்பது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார் உடலை சுயாதீனமாகப் பரிசோதனை செய்துவிட்டு அறிக்கை சமர்ப்பிப்பார் அதன் பிறகே உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பினைக் கூறும்.

இளவரசனின் கலப்புத் திருமணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இறுதியில் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த மனைவி திவ்யா பிரிந்து செல்வதாக அறிவித்த்தார்.
மனமுடைந்த தலித் இனத்தவரான இளவரசனின் உடல் கடந்த ஜூலை நான்காம் நாள் தர்மபுரியில் ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது.

இளவரசன் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் எனக் கருதும் இளவரசனின் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறுகின்றனர். இந்நிலையில் இளவரசனின் நண்பர் ரமேஷ் மறு பரிசோதனை கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவருகிறது.
தர்மபுரி பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவை நேற்று நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த ஏழு மருத்துவர்களில் மனுதாரர் ரமேஷ் தெரிவு செய்த மருத்துவர் மட்டும் தர்மபுரி பரிசோதனை பிழைபட்டது எனவே மீண்டும் பரிசோதனை தேவை எனக் கூறினார்.

மருத்துவர்களின் அறிக்கைகள் குறித்து இன்று புதன் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. பிறகு நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த சம்பத்குமார் நாளை தர்மபுரி சென்று இளவரசனின் உடலை பரிசோதனை செய்து பிறகு தனது கருத்தினைத் தெரிவிக்கட்டும். அதன் பிறகு வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறிவிட்டனர்.