விடுவிக்கப்படும் காணிகளை உரிமையாளர்களுக்கே வழங்கவும்!டக்ளஸ் தேவானந்தா!

364

1272885580Untitled-1

வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிக்க இந்த அரசு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இவ்வாறு விடுவிக்கப்படுகின்ற பகுதிகளில் அக்காணிகளின் உரிமையாளர்களே மீள்குடிமர்த்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கென இப்போது விசேட இராணுவத் தேவைகள் கிடையாது. எனவே மக்களின் நிலங்கள் அம் மக்களுக்கே சொந்தம் என்ற கொள்கை நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் நாம், வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள எமது மக்களின் காணிகள் அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அரசிடமும், இந்த அரசிடமும் முன்வைத்திருந்தோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எமது இக் கோரிக்கை முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய அரசு ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு முன்வந்துள்ளது. இது எமது தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு வெற்றியாகும்.

கடந்த காலங்களில் பாதுகாப்பு வலையங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளை மீட்டுள்ள நாம் அவற்றில் அவற்றின் உரிமையாளர்களையே இனங்கண்டு மீள்குடியமர்த்தி உள்ளோம்.

அவ்வாறு மீட்கப்பட்ட விவசாய நிலங்கள், கட்டிடங்கள் என்பன உரிமையாளர்கள் இனங்காணப்பட்டே கையளிக்கப்பட்டன.

அந்த வகையில் இப்போது விடுவிக்கப்படும் காணிகளிலும் அக்காணிகளின் உரிமையாளர்களையே மீள்குடியேற்றுவதற்கும் எஞ்சியுள்ள எமது மக்களது காணிகளைப் படிப்படியாக விடுவிப்பதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியுள்ளார்.