மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!!

369

Irland

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரில் 5வது லீக் போட்டியில் இன்று அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் இன்று மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியில் அசத்தியது. இதனால் 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணிக்கு சிமன்ஸ் 102 ஓட்டங்களையும், டெரன் சமி 89 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

பந்து வீச்சில் அயர்லாந்து அணியின் ஜோர்ஜ் டாக்ரெல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கெவின் ஓ பிரையன், ஜான் மூனி, அண்டி மெக்பிரைன் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

305 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற திணறினர்.

இதன் காரணமாக அயர்லாந்து அணி 45.5 ஓவர்களிலே இலக்கை எட்டியது. அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணித்தலைவர் வில்லியம் போர்ட்டர்பீல்டு 23 ஓட்டங்களையும், எட் ஜோய்ஸ் 84 ஓட்டங்களையும், நியால் ஓ பிரையன் 79 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் ஜான் மூனி 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில், டெய்லர் 3 விக்கெட்டுகளையும், கெய்ல், சாமுவேல்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டு முறை உலகக் கிண்ணம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை பலம் குன்றிய அணியாக கருதப்படும் அயர்லாந்து வீழ்த்தி கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.