உலக கிண்ண போட்டியில் 6வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இன்று மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதனையடுத்து, தனது துடுப்பாட்ட திறமையை காட்ட வந்த ஸ்கொட்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையை கட்டினார்கள். நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த வீரர்களும் ஆட்டமிழக்க ஸ்கொட்லாந்து அணி 12 ஓட்டங்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த பந்து வீச்சிற்கு இடையிலும் ஸ்கொட்லாந்து அணியின் இரு வீரர்கள் மேச்சன் (56 ஓட்டங்கள்), பெரிங்டன் (50 ஓட்டங்கள்) அரைசதம் அடித்தனர். இவர்களது அரைசதம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பெரிதும் உதவியது.
இறுதியில் ஸ்கொட்லாந்து அணி 36.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சிறப்பாக பந்து வீசிய விட்டோரி, கோரி அன்டர்சன் தலா 3 விக்கெட்டுகளையும், சவுத்தி மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
143 ஓட்டங்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. நியூசிலாந்து அணி 24.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.