இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சாதனை வெற்றியை பதிவு செய்த நியூஸிலாந்து அணி!!

503

NZ

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் ஆட்டம் வெலிங்டனில் இன்று நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்த அணி சார்பில் களமிறங்கிய எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் வரிசையாக வௌியேறினர். 33.2 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்ட இங்கிலாந்து 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் அதிகூடிய ஓட்டங்களாக 46 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து 124 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்த நிலையில் 125 ஓட்டங்களை பெற்று, 226 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுக்களால் வெற்றி வாகை சூடியது.

நியூஸிலாந்து அணி சார்பாக பிரண்டன் மெக்கலம் அதிகூடிய ஓட்டங்களாக 77 ஓட்டங்களை பெற்றார். இதில் 8 நான்கு ஓட்டங்களும் 7 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

இதன்படி பிரண்டன் மெக்கலம், உலகக் கிண்ணப் போட்டிகளில் 18 பந்துகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை இன்று தன்வசப்படுத்தியுள்ளார்.

மேலும் ஒரு நாள் போட்டிகளில் விரைவாக அரைச்சதம் அடித்த 3வது வீரராகவும் இவர் திகழ்கின்றார். முதலிரண்டு இடங்களில் டிவிலியர்ஸ் (16), சனத் ஜெயசூரிய (17) உள்ளனர்.

இதேவேளை இந்தப் போட்டியில் அசத்தலாக பந்து வீசிய நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
9 ஓவர்கள் பந்து வீசிய அவர் 33 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது, உலகக் கிண்ண வரலாற்றில் 3வது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

முதலிரண்டு இடங்களில் அவுஸ்திரேலியாவின் மெக்ராத் (7ஓவர்கள், 15 ஓட்டங்கள்), அன்டி பிக்செல் (10 ஓவர்கள்,20 ஓட்டங்கள்) உள்ளனர். இருவரும் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதேவேளை இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி நியூஸிலாந்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற சவுத்தி போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.