காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் ஷாப்பிங் சென்று திரும்புவதற்கு நேரமானதால் ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக ஐதராபாத் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் மத்திய மந்திரியும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது உடமைகள் அனைத்தும் ஏற்றப்பட்டுவிட்ட நிலையில், விமானம் மாலை 7 மணியளவில் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது, பயணிகளுக்கான இறுதி அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி இறுதி அழைப்பு நேரம் வரையில் விமானத்தில் ஏறவில்லை.
விமானத்தில் இருந்த அவரது உடமைகளை உடனடியாக இறக்கிவிட முடியாத காரணத்தால், விமான நிலைய பணியாளர்கள் ரேணுகா சவுத்ரியின் பெயரை பலமுறை அழைத்ததோடு விமானமும் காத்திருந்தது.
இறுதியாக ஷாப்பிங் செய்த களைப்புடன் விமான நிலையத்துக்குள் அவர் நுழைந்தபோது, விமானம் புறப்படுவதற்கு அளிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டது.
இதனால் மீண்டும் புதிய அறிவிப்பு வரும்வரை விமானி காத்திருந்தார். இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விமானம் சுமார் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதனை மறுத்துள்ள ரேணுகா சவுத்ரி, நான் ஷாப்பிங் சென்றதால்தான் விமானம் தாமதமாக புறப்பட்டது என்பதை நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது ஏர் இந்தியா இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.






