வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி!!

475

Afcan

ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ண தொடரொன்றில் தனது முதலாவது வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பதிவுசெய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் மசான் மற்றும் ஹக் ஆகியோர் தலா 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் சபூர் சட்ரான் 4 விக்கெட்டுக்களையும், தவ்லாட் சட்ரான் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் மத்தியதர வரிசை வீரர்கள் தடுமாற்றத்தை எதிர்நோக்கிய போதிலும் சமியுல்லா சென்வாரி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணி வரலாற்று வெற்றியை பெற வழியமைத்துக் கொடுத்தார்.

அவர் 147 பந்துகளுக்கு முகங்கொடுத்து 96 ஓட்டங்களைப் பெற்றார், அவரைத்தவிர ஆரம்ப வீர ராக களமிறங்கிய ஜாவிட் அஹமடி 51 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றார். இறுதி விக்கெட்டில் 19 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவை என இருந்த நிலையில் ஹமிட் ஹசன் மற்றும் சபூர் சட்ரான் ஜோடி போராடி இலக்கை எட்ட உதவியது.

ஸ்கொட்லாந்து சார்பில் பெரிங்டன் 40 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். வெற்றியின் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியினர் ஆரவாரத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.