வவுனியாவிற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் : எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது!!

811

VV

எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது என, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (26.2) கந்தசாமி ஆலயத்திற்கு வந்த அவர், அங்குள்ள மக்களை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து வௌியிடுகையில்,

மீள்குடியேற்றம் தொடர்பான நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாம் கதைத்துப் பேசி காலத்தை கடத்தாமல் இங்குள்ள மக்கள் விரும்பும்படியாக பேசி தீர்வு காணவேண்டும் என கூறினார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து அகதிகளை வரவழைப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,

இந்தியாவில் இருந்து இங்கு வர 20 தொடக்கம் 30 வீதமானவர்களே விருப்பம் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கான தங்குமிடம், வசதிகள் குறித்து அறிந்துதான் வரவழைப்போம்.

அவர்களை அழைத்து வருவதற்கு முன்னர் வவுனியா, கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையிலும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் உள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.

அவர்கள் இழந்த காணிகளை திரும்பவும் கொடுக்க வேண்டும். அந்த கடமைகளை தான் முதலில் நாம் செய்வோம்.

அதன் பின்னர் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் அங்கிருந்து வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பின்னரே வரவழைக்க முடியும். அப்படி இல்லாமல் அவர்களை வரவழைக்க முடியாது, எனக் குறிப்பிட்டார்.