வீட்டைவிட்டு வெளியே சென்ற 10 வயதுடைய சிறுமி நாளை திங்கட்கிழமை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்ப்படுத்திய பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவ நகரத்திலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் 10 வயது மதிக்கதக்க பாடசாலை சிறுமி வீட்டில் உள்ள உறவினர்களுக்கு தெரியாமல் 28.02.2015 அன்று பிற்பகல் பஸ்ஸில் சென்ற போது குறித்த பஸ்ஸில் இருந்த சாரதியும் நடத்துனரும் சந்தேகப்பட்டு இந்த மாணவியை நோர்வூட் பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின் நோர்வூட் பொலிஸார் விசாரணை செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் 50 ரூபாய் இருந்ததாகவும் விசாரணை செய்த போது தனது தந்தை மதுபானம் அருந்திவிட்டு தொடர்ச்சியாக தன்னை துன்புறத்துவதாகவும் இதனால் மனவேதனையடைந்து வீட்டில் இருந்து வெளியே செல்ல முற்பட்டதாக சம்மந்தப்பட்ட சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
மேற்படி சிறுமி பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவராவார். 01.03.2015 அன்று குறித்த சிறுமியின் பெற்றோர்களை நோர்வூட் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.
தந்தையின் துன்புறுத்தலால் குறித்த சிறுமியின் 14 வயதுடைய அண்ணன் கடந்த வருடத்தில் இவ்வாறு வீட்டை விட்டு கொழும்புக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.






