உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 4வது லீக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், தொடர்ந்து 4 லீக் போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலக கிண்ண போட்டியின் 28வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதிக்கொண்டன. இதில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஹோல்டர் 57 ஓட்டங்களை பெற்றார். இந்நிலையில் 44.2 ஓவர்களில் மேற்கிந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக முஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 183 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 39.1 ஓவர்கள் நிலையில் 6 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.






