வவுனியா வைத்தியசாலைக்கு வடமாகாண சபையால் சிறந்த சுகாதார சேவைக்கான விருது-2014(படங்கள்)!

734

2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கியமைக்கு விருது வழங்கும் விழா யாழில் இடம்பெற்ற போது வடக்கு முதலமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

யாழ் நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் கடந்த 04.03.2015 புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில்   HEALTH EXCELLENT AWARD 2014 என்னும் விருது  சிறந்த சுகாதார வைத்திய சேவையை வழங்கியமைக்காக  வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு வழங்கபட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் புதிதாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு மாகாணமும் ஏனைய மாகாணங்களைப் போன்று சிறந்த சேவையாற்றி வருகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் இன்றும் அதிகளவான தேவைகள் இருப்பதாகவும் எனினும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் கடந்த காலத்தில் நடைபெற்ற போரின் காரணமாக இங்குள்ள மக்கள் சொத்து மற்றும் உயிரிழப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர். அத்தோடு இந்தப் போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் கஷ்ரங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் நாட்டிலுள்ள 9 மாணாகங்களில் வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் ஏனைய மாகாணங்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை நிறையவே உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்றாலும் வடக்கு மாகாணத்தின் சுகாதாரக் குறிகாட்டி ஏனைய மாகாணங்களுக்கு நிகராகவே உள்ளது. வடக்கு மாகாணத்தின் விசேட தேவைகளை ஆராய்ந்து ஐந்து வருடத்திற்கான சுகாதாரத் திட்டமொன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுகாதாரத்துறையில் ஆளணிப்பற்றாக்குறை நிறையவே காணப்படுகிறது. குறிப்பாக மாகாணத்திலுள்ள 101 வைத்தியசாலைகளில் 37 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையே இருக்கின்றது. இந்த நிலைமையானது நாட்டிலுள்ள மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படுகின்ற பிரதான குறைபாடாகும் என்றார்.

வடக்கில் பல ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோர், கணவனை இழந்த பெண்கள் என எப்போதுமே பிரச்சனைகளின் மத்தியில் பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களினது நலனிலேயே வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் அக்கறை கொண்டு சேவைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் சத்தியலிங்கம் கேட்டுக் கொண்டார்.

1509017_606402022780981_198147470_n 10405428_788904077864107_49396337368443886_n 10408541_788904244530757_3190883160169083045_n 11046772_788904131197435_7516806130636907587_n 11046928_788904204530761_3243469308312245643_n IMG_4366-600x450 IMG_4381-600x450