இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

533


Tamil

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு பார்க்க முடிகின்றது.கைத்தொழில் அபிவிருத்தி கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள், கல்வியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் பெறுபேறுகளும், தொழில்நுட்ப விருத்தி, பாதைகள் புனரமைப்பு, மின்சார வழங்கல் என்பவை அபிவிருத்திக்குரிய குறியீடுகளாக அவ்வப்போது காட்டப்படுகின்றன.

சுமூகமான சுற்றாடல் இலக்கியப் படைப்புக்கள் எழுவதிலும் அதே போன்ற ஒரு பங்களிப்பைக் காட்டுவதை யாரும் மறுத்துவிட முடியாது. அதுவும் எமது தலைமுறையினர் அடுத்தடுத்து சந்தித்த பொருளாதார, அரசியல், சமுதாய நெருக்கடிகள், இளம் சமுதாயத்தினரை வெகுண்டெழுச் செய்து தங்களது தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளுகின்றன. அவற்றினால் உந்தப்பட்ட எமது இளைய தலைமுறையினர் தங்களுடைய ஆதங்கக்களை வெளிப்படுத்துவதற்கு முக்கியமாகக் கவிதை வடிவத்தைப் பாவிக்க முனைகின்றனர்.ஏனைய இலக்கியங்களைவிட இசையோடு கூடிய பேச்சு அல்லது கவிவடிவங்கள் மக்களை இலகுவாகவே சென்றடைந்துவிடுகின்றன. கவிதைக்கு இது தான் என்று ஒரு வரையறையை யாருமே செய்துவிடாது இருப்பதால் யாரும் அதைக் கையாண்டு உருவாக்க முடியும் என்ற எண்ணத்தையூம் அவர்கள் கொண்டுள்ளனர். இதனால் இலக்கியத்திற்குள் நுழைவதற்கு ஒரு திறவு கோலாகவே கவிதை என்ற வடிவத்தைப் பாவிக்கின்றனர்.அதைவிடவும் இது படைப்பாளியின் புலமையை மதிப்பிடும் ஒன்று அல்ல என்றும் வாசகனின் மனதை ஆற்றுப்படுத்தவல்ல அருமருந்தே என்பதையும் இளைய சமுதாயம் மனதளவில் கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.


இளமையிலேயே பலவிதமான துயரங்களை சந்தித்த எம் சமூகத்தினருக்கு இப்பொழுது தேவைப்படுவது ஆறுதல் என்பது அனைவருமே உணர்ந்தது தான். ‘நாம் உங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் உங்களைப் புரிந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தை எம்மவரிடையே விதைப்பது மிக முக்கியதாகும். அதற்கு இலக்கியங்கள் துணை செய்து அரிய பங்களிப்பை வழங்குகின்றது என்ற எண்ணத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.;

அது மட்டுமல்ல. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பதால் எமது காலத்தில் நடந்துவிட்ட பதிவுகளைச் சரியாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இலக்கியத்தை உயிரோட்டமாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஒரு சிலர் கையாள்வதாகத் தெரிகின்றது. அது மட்டுமல்ல சமகால நிகழ்வுகள், நிதர்சனங்கள், பொருளாதார நெருக்கடி தொழில்நுட்ப வளர்ச்சியின் கோரத் தாண்டவங்கள், இயற்கையின் சீற்றம் போன்ற விடயங்களைப் பதிவளித்துத் தங்கள் இலக்கை அடையவும் முனைகின்றனர்.


அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதைப் போல அது ஆதங்கப் படைப்பாகவே எழுந்தாலும் அதன் விளைவு உலகிற்கு அவலங்களை எடுத்துக் காட்டி தீர்வுகளைத் தேடிக் கொள்ளவும் துணைபுரியும். மனித வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் எந்த பல இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையை மாற்றியமைத்ததை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது.

அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கும் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்கும் இலக்கியங்கள் உறுதுணையாக இருந்தன. பெண் விடுதலை பற்றிய பாரதியின் பாடல்கள் அவரின் தேசவிடுதலை பாடல்கள் தமிழ் நாட்டில் பல எழுச்சிகளைக் கொண்டன. ஐரோப்பாவில் உயர் குடிப் பெண்கள் வாசிப்பதற்காக எழுந்த இலக்கியங்கள் பல பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்தன.

பதிவுகள் அனைத்தும் இலக்கியம் ஆகுமா?

நடப்புக்களை அவ்வாறே சொல்லிக் கொள்வதை செய்திகள் என்போம். நிகழ்ந்துவிட்ட பதிவைத் தரவுகளோடு வழங்குவதை சரித்திரம் என்போம். படைப்பிலக்கியம் இவற்றில் இருந்து வேறுபட்டு நயத்துடன் அமைய வேண்டும்.


நயத்துடனே எழும் இலக்கியத்தை படைப்பதற்கு அனுபவம் அவசியமாகின்றது. அனுபவம் அறிவுறுத்தும் பாடத்தை அத்தனை தெளிவாக ஆசிரியராலேகூட சொல்லிக் கொடுத்துவிட முடியாது. இந்த அனுபவமானது ஒவ்வொருவரினதும் வயதைப் பொறுத்தும் தேடலைப் பொறுத்தும் கிடைக்கின்றது என்பது உலகமறிந்த உண்மையாகும். தேடல்களில் இருந்து எழும் பொது நோக்கு தீர்வாகும் போது அது காத்திரமான இலக்கியமாக வடிவெடுக்கின்றது.

கவிதைகளுக்கு சிறப்பான நயம் என்பது கற்பனையால் உருவாக்கப்படுகின்றது. அந்தக் கற்பனையினாலேயே ஒரு விஞ்ஞானிக்குரிய இடத்தைப் படைப்பாளி பெற்றுக்கொள்கின்றான். கவிவரிகள் உவமை, உருவகம் தற்குறிப்பேற்றம் உயர்வு, நவிற்சி போன்ற அணிகளால் அலங்கரிக்கப்படுகின்றது. பெண்ணுக்கு அணிகலன்கள் அழகு சேர்ப்பதைப் போல படைப்புக்கு அழகையும் கனதியையும் இவை சேர்த்து நிற்கின்றன.

அவற்றில் இருந்தெல்லாம் வேறுபட்டு கற்பனை என்பதை முற்றாகவே தள்ளிவிட்டு நடப்பைக் காட்சிப்படுத்துவது போல ஒரு விடயம் தற்பொழுது கையாளப்படுகின்றது. இது கவி வடிவத்தையும் கவித்துவத்தையும் தொலைத்துவிட்டதாகப் பெரியவர்களால் குறை சொல்லப்படுகின்றது.

காலத்தின் கோலங்கள் இளையவர்களின் கருத்துக்களை வெகுவாக ஈர்த்துக் கொள்வதையும் நாம் இங்கு கவனித்தே ஆகவேண்டும். இன்றைய விஞ்ஞான விருத்தியின் முன்பாக மனிதனின் ஓட்டம் எப்படி இருக்கிறது? ஒரு உயரமான மலைச் சரிவில் ஓய்வில் இருந்த ஒரு பாறாங்கல் உருளத் தொடங்கும் ஒரு நிலையைக் கற்பனை செய்து கொள்வோம். அதைப் பார்த்துக் கொண்டு நின்ற குரங்கு ஒன்று பயந்து கொண்டு அதற்கு முன்னாலே ஓடிச் செல்வது போல அமைந்தது தான் விஞ்ஞானத்தில் முன்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் ஓட்டமாகும். அவர்கள் நின்று நிதானிக்க வேண்டும்.

தொழில்நுட்ப விருத்தியினால் ஓடிக்கொண்டிருக்கும் எமது இளைய சமுதாயம்இ எவ்வாறு ஆறுதலாக நயத்துடனான படைப்புக்களை வழங்கப் போகின்றது என்பதும் கேள்விக்குறிதான்.

வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஏற்றது போலவும் இன்றைய நெருக்கடி நிலையை மேவும் விதமாகவுமே அவர்களின் இலக்கியங்கள் அமையலாம் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் அவற்றின் நிலைத்திருக்கும் தன்மை என்பது எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற கேள்வியும் அடுத்ததாக எழுகின்றது.
இலக்கியத்தில் பெரியவர்களின் பங்களிப்பு
இன்றைய தலைமுறையினர் பலவித நெருக்கடிகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொண்டுஇருப்பதால் இலக்கியங்கள் குறிப்பிட்ட வடிவமின்றி அவசரத்திற்கு ஏற்றது போலவே உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்ற எடுகோளுடன் பயணம் செய்தோம். அவற்றின் நிலைக்கும் தன்மை என்று பார்க்கும் போது எமக்கு இருபது வருடங்களுக்குப் பினனான தலைமுறையினரைப் பற்றி நோக்குவோம். அவர்கள் யுத்த சூழலையோ பொருளாதார நெருக்கடியையோ அறியாதவர்களாகவே இருப்பர்.

அவர்கள் பார்வையில் எமது இலக்கியங்கள் குறைந்துவிடக் கூடாது. இலக்கியங்கள் காலத்தைக் கடந்தவை. மனித உடல் மறைந்த பின்பும் இலக்கியங்கள் வாழும். பாரதியாரையும் கம்பரையும் கண்ணதாசனையும் இன்றும் நாம் முன்னிலையில் பொற்றவில்லையா?. காலத்தால் அழியாத இலக்கியங்களைப் படைக்க வேண்டியது எமது கடப்பாடல்லவா?

இலக்கியத்தினைப் பற்றிய அறிவையும் அறிமுகத்தையும் மட்டும் வழங்குவது அல்லாமல் இளையவர்களின் படைப்புக்களைத் தொடர்ந்து அவதானித்து இந்த விடயங்களை உறுதி செய்வது பெரியவர்களின் பங்களிப்பாகும். இளையவர்களின் ஆதங்கத்தைப் பரிந்துகொண்டு அவர்களை அன்பாலே வழிப்படுத்தி அழைத்துச் செல்ல வெண்டியவர்கள் அவர்களே.

பெரியவர்களின் பங்களிப்பு வரும்போதே மரபு என்ற விடயமும் இதற்குள்ளே புகுந்து விடுக்கின்றது. அவசர உலகம் விளங்கிக் கொள்ளுமாறு எளிமையாகப் படைப்புக்களை செய்வது போலவே மரபு என்ற விடயத்தையும் புகுத்திக் கொள்ள வேண்டும். இதனால் எளிமை மரபு என்ற இரு எல்லைகளுக்குள்ளே இலக்கியங்களைப் படைப்பது நலமானதாகும்.

வாழ்வினில் எப்பொழுதும் இரு எல்லைகளைக் கொண்டிருப்பது சிறப்பானதே. ஓடும் ஆறு இரு கரைகளைக் கடக்காது இருப்பதைப் போல எனது இலக்கியத்தையும் எளிமை மரபு என்ற எல்லைகளுக்குள் பேணுதலே கடமையாகும்.

அவ்வாறான இரு எல்லைகளுக்குள் கவித்துவத்தையும் கவி நயப்பையும் கட்டியாளுவோம். கவிதையின் வகைகளைக் கொண்டு கவிஞர்களை விமர்சிக்காமல் எண்ணங்களின் வெளிப்பாடுகளை வரவேற்போம். இளையவர்களுக்கான களம் பெரியோரால் ஏற்படுத்தப்படட்டும். எமது இலக்கியமும் காலங்கடந்தும் வாழட்டும்.

-நன்றி மைதிலி தயாபரன்-