சிரியாவில் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி!!

282

Attack

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிரியாவில் உள்ள சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கைப்பற்றி உள்ள தீவிரவாதிகள், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

சிரியாவில் துர்கிஷ் எல்லைப்பகுதியில் தெல் அப்யாட் நகரின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதன் மீது அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று முன்தினம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 30 பேர் பலியாகினர். இதுகுறித்து அமெரிக்க கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘எண்ணெய்க் கிணற்றை குறி வைத்து நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் பலியானோர் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. கணக்கிடும் பணி நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.