இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை ஒன்றை சற்று முன்னர் தன்வசப்படுத்தியுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளின் 35வது லீக் போட்டியில் இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி, நாணய சுழற்சியில் வென்றதோடு முதலில் துடுப்பெடுத்தாடவும் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு நான்கு ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்து லகிரு திரிமானே ஏமாற்றமளித்தார்.
எனினும் அடுத்ததாக துடுப்பெடுத்தாட வந்த குமார் சங்கக்கார மற்றுமொரு ஆரம்ப வீரரான திலகரத்ன டில்ஷானுடன் இணைந்து ஸ்கொட்லாந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார்.
இதன்படி சங்கக்கார சற்று முன்னர் ஒருநாள் போட்டிகளில் தனது 25வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்போது ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை இவர் வசமானது.
முன்னதாக மெல்போனில் பங்களாதேஷுடன் இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 105 ஓட்டங்களையும், வெலிங்டனில் இங்கிலாந்துடன் இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 117 ஒட்டங்களையும் சிட்னியில் அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியில் 104 ஓட்டங்களையும் சங்கக்கார விளாசியிருந்தார்.