தமிழிலும் தேசிய கீதம் பாடலாம் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு!!

428

Flag Of Sri Lanka

தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக வௌியான தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம் என கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என பிபிசி கூறியுள்ளது.

“ஶ்ரீ லங்கா மாதா..” என்ற சுதந்திர இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் ஆனந்த சமரக்கோன் இயற்றி இருந்தார். “பின்னர் ஶ்ரீ லங்கா தாயே..” என இதனை இலங்கைக் கவிஞர் எம்.நல்லதம்பி தமிழில் மொழி பெயர்த்தார்.

பாடசாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்பட்டு வந்தது.

பல தசாப்தங்களாக இலங்கையின் தேசிய கீதம் இரு மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2009ம் ஆண்டு இலங்கையில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜாதிக ஹெல உறுமய போன்ற, தேசிய சுதந்திர முன்னணி போன்ற சிங்களக் கட்சிகள் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடைசெய்ய வலியுறுத்தின.

இதன்படி 2010ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உள்விவகார அமைச்சராக இருந்த ஜோன் செனவிரத்ன தமிழில் தேசிய கீதத்தைப் பாட அனுமதிக்க முடியாது என்ற வகையில், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன.

அத்துடன் தமிழர் தரப்பில் தென்னாபிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பல்வேறு மொழிகளில் தேசிய கீதம் இசைப்பதை மேற்கோள் காட்டி பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டும் வந்தன.

இந்தநிலையில் இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்குப் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த விடயத்தை, தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.