தாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!

490

Amma

நம்மைப் படைத்த கடவுளால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், ஒரே உருவத்தில் நம்முடன் இருக்க முடியாது என்பதால், தாயை அவர் படைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அத்தகைய தாயை மதித்து நேசிக்காதவர்கள் வாழ்க்கையை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

தாய்ப்பாசத்திற்கு நிகராக வேறு எதையும் சொல்ல முடியாது. பலவீனமாக உள்ள எண்ணற்ற நேரங்களில் நம் வாழ்வில் அவள் துணையாக இருக்கிறாள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் தாய், தன்னுடைய சொந்த தேவைகள் எதையும் நினைப்பதில்லை.

தாயால் ஒரே நேரத்தில் தோழியாகவும் ஆசிரியராகவும் இருக்க முடியும். அத்தகைய மேன்மை மிக்க தாய்மார்களிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.

பொறுமையின் மதிப்பு..

உங்கள் குழந்தை பருவத்தை மீண்டும் நினைத்து பாருங்கள். பள்ளிப் பருவத்தில் உங்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு உதவி செய்யும்போது, உங்கள் மீது அம்மா ஒருபோதும் எரிச்சல் அடைந்தது இல்லை என்பது நினைவில் இருக்கிறதா? நீங்கள் இளமைப் பருவத்தில் பிடிவாதம் செய்தபோது அதனை அன்னை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. நீங்கள் அவளுடன் வாதிடும்போது கூட, உங்கள் மனம் புண்படும்படி அவள் எதையுமே செய்ததில்லை.

கருணையின் முக்கியத்துவம்..

நண்பர்கள், எதிரிகள், நாய்கள், பூனைகள் மற்றும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று தாய்மார்கள் நினைப்பதுண்டு. ஒரு தாயின் கருணை வீட்டில் அனைவரிடத்திலும் பரவலாக இருக்கும். இதனை தனது வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் அவள் உபசரிக்கும் பக்குவத்தில் புரிந்துகொள்ளலாம். நம்மைவிட துர்பாக்கியசாலிகள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதை நமக்கு தனது செயல்களின் மூலம் உணர்த்தியவள் ஒரு தாயைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

சுயநலமின்மை எனும் பெருங்குணம் ஒரு தாய்க்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. தங்களது குடும்பத்தினரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதில் எந்த மறுசிந்தனைக்கும் அவர்கள் இடமளிப்பதில்லை.