வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 100 வருடத்தைக் கடந்த ஒல்லாந்தர் காலக் கட்டடம் ஒன்றின் பழமையைப் பேணும் பொருட்டு புனரமைக்கும் நோக்குடன் நேற்று மதியம் 1.00 மணியளவில் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தம்பிராஜா குருகுலராஜா அவர்கள் இப் பாடசாலைக்கு விஜயம் செய்தார்.
இவருடன் பாடசாலை வேலைகள் பணிப்பாளர் , எந்திரி திரு.தே.சுரேஸ்குமார் மற்றும் உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டு அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பாடசாலைக் கல்வி நிலை, பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. புதிதாக அமைத்து வேலைகள் நிறைவடையும் நிலையில் இருக்கும் தொழிநுட்ப ஆய்வுகூடம், தொழிநுட்பபீடம் என்பவற்றையும் பார்வையிட்டதுடன், பாடசாலை சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டார்.
மலசலகூட பற்றாக்குறை தொடர்பாக கலந்துரையாடிய போது உடனடியாக அதற்கான வேலையை ஆரம்பிக்க ஆவண செய்து தருவதாகவும் குறிப்பிட்டார்.
















