உலகக்கிண்ணம் வெல்லப்போவது யார் : நியூசிலாந்து- அவுஸ்திரேலிய அணிகள் நாளை பலப்பரீட்சை!!

1130

WC WC1

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மோதுகின்றன.

11வது உலகக்கிண்ணத்தை நடத்தும் நாடுகளான அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. இவ்விரு நாடுகளின் மோதல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவே கணிசமான ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக கூறுகிறது.

உலகக்கிண்ண போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி 6ல் அவுஸ்திரேலியாவும், 3ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றிருக்கின்றன.

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள பிரன்டன் மக்கலம் தலைமையிலான நியூசிலாந்து முதன்முறையாக உலகக்கிண்ண மகுடத்தைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது.

நாளை ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது நியூசிலாந்து அணியின் 300வது ஒருநாள் போட்டி வெற்றியாகவும் அமையும். அதே சமயம் 5வது பட்டத்திற்கு குறி வைத்துள்ள மைக்கல் கிளாக் தலைமையிலான அவுஸ்திரேலியாவும் எதிரணியை துவம்சம் செய்ய பல வியூகங்களை தீட்டி வருகிறது.

இந்த உலகக்கிண்ணத்தை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி லீக் முதல் அரையிறுதி வரையிலான தனது அனைத்து ஆட்டங்களையும் சொந்த நாட்டிலேயே விளையாடி இருக்கிறது.

இப்போது தான் முதன்முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடப் போகிறது. இது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அவுஸ்திரேலியா கருதுகிறது.

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இவ்விரு அணிகளும் ஒரே பிரிவில் (ஏ பிரிவு) இடம் பெற்றிருந்ததால் லீக்கில் சந்திக்க நேர்ந்தது.

ஒக்லாந்து ஈடன் பார்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 32.2 ஓவர்களில் 151 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் எளிய வெற்றியை பெறும் வகையில் களமிறங்கிய நியூசிலாந்தை அவுஸ்திரேலிய வீரர்கள் கலங்கடித்தனர்.

இருப்பினும் நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விகளுக்கு இறுதிப் போட்டியில் பதிலடி கொடுக்கப் போவதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் சவால் விடுத்துள்ளார்.

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் சாதனை படைக்க இவ்விரு அணிகளில் யார் சம்பியன் ஆகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.