வேந்தர் மூவிஸ் செய்யும் தில்லுமுல்லு!

435

thillu-mullu1தமிழ் சினிமா மீதான ஆசையால் சுவிஸ் நாட்டில் இருந்து படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். வந்த வேகத்திலேயே தொடர்ச்சியாக 6 படங்களுக்கு பூஜை போட்டு அதிரடி காட்டினார்.

சினிமா உலகத்தைப் பொறுத்தவரை முதலில் ஒரு படம் எடுப்பார்கள். அது ரிலீஸானதும், ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இறங்குவார்கள். அப்படிச் செய்யாமல், ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு பூஜை போட்டதைப் பார்த்ததும் கோடம்பாக்கமே கொஞ்சம் மிரண்டுதான் போனது.

அவருக்கு நெருக்கமான சிலர், “பொறுமையா இருங்க. ஒவ்வொரு படமா பண்ணலாம்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அவரோ, “நல்ல கதைகள் வரும்போதே நாம ஓ.கே. பண்ணிடணும். கதைகளை மிஸ் பண்ணிட்டு அப்புறமா ஃபீல் பண்றது வேஸ்ட்”னு சொல்லி, தயாரிப்புக்கு புது இலக்கணமே உருவாக்கியிருக்கிறார்.

அப்படியாப்பட்ட மனிதருக்கு வேந்தர் மூவீஸ் வடிவில் வந்திருக்கிறது சோதனை. அவருடைய தயாரிப்பில் உருவான “நளனும் நந்தினியும்”, “சுட்ட கதை” ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸிற்குத் தயார்நிலையில் உள்ளன.

இரண்டு படங்களையும் வாங்கி வெளியிடுவதாக வாக்குறுதி கொடுத்த வேந்தர் மூவீஸ் நிறுவனம், இதுவரை அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்பதுதான் ரவீந்தரின் வேதனைக்குக் காரணம்.

சென்ற மாதம் தன்னுடைய சொந்தத் தயாரிப்பான “தில்லுமுல்லு”
படவேலைகளில் பிஸியாக இருந்த வேந்தர் மூவீஸ், தற்போது “தலைவா” படத்தை வாங்கியிருக்கிறது.

“தலைவா” ஓகஸ்ட்டில் ரிலீஸ் என்பதால், அது தொடர்பான வேலைகளில் பரபரப்பாக இருக்கின்றனர். இதனால் ரவீந்தரின் படம் குறித்து வாய்திறக்கவே இல்லையாம்.

படம் தயாரான சூட்டோடு சூடாக ரிலீஸ் செய்தால்தான் ஓரளவிற்கு ஓடும். இந்த இரண்டு படங்களுமே ரிலீஸிற்குத் தாமதம் ஆவதால் என்ன செய்வதென தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்.

ரவீந்தர் சந்திரசேகர் தனது ஃபேஸ்புக் இணையத்தில் கூட “ஏண்டா படம் எடுக்க வந்தோம்.. ” என்று புலம்பி தள்ளி இருக்கிறார்.