ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் கடந்த 7ம் திகதி செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்களும் நேற்று அடையாளம் காணப்பட்டது. அதில் 12 பேர் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள். 5 பேர் தர்மபுரி, 3 பேர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து சென்ற அவசரஊர்தியின் மூலம் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தேசிய ஆணையம் நோட்டீஸ்
சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேர் ஓரிடத்திலும், 9 பேர் வேறொரு இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 9 பேர் பிணமாக கிடந்த இடத்தில் 7 பேர் முகத்திலும், பின்புற கழுத்திலும் சுடப்பட்டுள்ளனர்.
பலரது உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது. வயிறு, தோள்பட்டை, கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இதுவரை இப்படி ஒரு கொடுமை நடந்தது இல்லை என்றும் இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர பொலிஸ் விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.






